09/08/2014
பிளஸ் ஒன் மாணவர்களுக்கு IOC ஸ்காலர்ஷிப்!
மோ. கணேசன்
பிளஸ் ஒன், ஐ.டி.ஐ., என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.
பிளஸ் ஒன், ஐ.டி.ஐ., என்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ., போன்ற படிப்புகளில் முதலாண்டில் படித்து வரும் 2,600 மாணவர்களுக்கு பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
பிளஸ் ஒன் மற்றும் ஐ.டி.ஐ.யில் முதலாண்டு மாணவர்கள் இரண்டாயிரம் பேர் இந்த உதவித் தொகை பெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற விரும்பும் பொதுப் பிரிவு மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மகளிர் 60 சதவீத மதிப்பெண்களும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்ஜினீயரிங் முதலாண்டு படிக்கும் 300 மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். முதலாண்டு படிக்கும் 200 மாணவர்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இதேபோல எம்.பி.ஏ., படிக்கும் 100 மாணவர்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெறுவதற்கு, பிளஸ் டூ தேர்வில் பொதுப் பிரிவினர் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மகளிர் 60 சதவீத மதிப்பெண்களும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்களுக்கு 15 வயதிலிருந்து 30-வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது, 1.07.1984 தேதியன்றோ, அதற்குப் பிறகோ, 1.07.1999 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. மாணவர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.
தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது ஆன்லைன் முறையிலோ அல்லது வீட்டிலிருந்து தனித்தேர்வர் முறையிலோ படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரும், தங்களது படிப்புகளில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த உதவித் தொகைக்காக விண்ணப்பிப்போர் வேறு இடங்களிலிருந்து உதவித் தொகைகளை பெறக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான வருமானச் சான்றிதழை தகுதி வாய்ந்த அரசு அலுவலரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் பெயரில் தனியே வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் புகைப்படம் மற்றும் கையெழுத்தினை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டியிருக்கும். ஆன்லைனில் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்தபின், அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, போதிய சான்றுகளின் நகல்களோடு இணைத்து விரைவுத் தபால் அல்லது பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் அடிப்படையிலும், மாநில வாரியாகவும், மண்டல வாரியாகவும் தகுதி வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் வாயிலாக உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களில் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் போனஸ் பரிசாக வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபாலில் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 15.10.2014
அனுப்ப வேண்டிய முகவரி:
Sify Technologies Limited, (Iocl Ess I-Test Division), Plot No B 7, Sector-132, Noida - 201301 (Uttar Pradesh)
விவரங்களுக்கு: www.iocl.com/Aboutus/IndianOilScholarships.aspx