05/11/2015
இகாமர்ஸ்' எனப்படும், இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில், 10ல் நான்கு, தரமற்றவை; போலியானவை, என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
நுகர்வோர் நலன் மற்றும் உரிமை பாதுகாப்பு மீதான, சீன அரசின் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்தாண்டு, இணையவழி வர்த்தகத்தில், அமெரிக்காவை, சீனா, பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்தாண்டில், அமெரிக்காவில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு இணையவழி வர்த்தகம் நடந்துள்ளது; சீனாவில், 28 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஆனால், இணையவழி வர்த்தகம் மூலம், சீனாவில், எண்ணற்ற போலி பொருட்கள் விற்பனை ஆவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும், அரசின் வர்த்தகத்துறைக்கு, இது சம்பந்தமாக, 78 ஆயிரம் புகார்கள் வந்தன.
முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், இது, 356 சதவீதம் அதிகம்.இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் 10 பொருட்களில், நான்கு, தரமற்றதாகவோ, போலியாக தயாரிக்கப்பட்டதாகவோ உள்ளது. இதைத் தடுக்க, இணையவழி வர்த்தகம் மூலம், மக்களுக்கு விற்கப்படும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க வேண்டும்; போலி தயாரிப்பாளர்களை ஒடுக்க, கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனத் தயாரிப்புகள் குறித்து, உலக நாடுகள் மத்தியில், எப்போதும் நல்ல பெயர் கிடையாது. இச் சூழ்நிலையில், இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலி என்பதை ஒப்புக்கொண்டு, சீன அரசே அறிக்கை வெளியிட்டிருப்பது, மிக அபூர்வமான விஷயம் என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவில், 328 பட்டியலிடப்பட்ட, 'இன்டர்நெட்' நிறுவனங்கள் உள்ளன. அந்நாட்டின் மொத்த சந்தை மதிப்பில், 25 சதவீதத்தை, இவை பெற்றுள்ளன. இவற்றில், 'அலிபாபா' உட்பட, நான்கு நிறுவனங்கள், உலகின் முன்னணி இன்டர்நெட் நிறுவனங்களாக உள்ளன.கடந்தாண்டில், சீனாவில், இணையவழியில் பொருட்களை வாங்கியோர் எண்ணிக்கை, 36 கோடியாக அதிகரித்தது. இது, மொத்த வாடிக்கையாளர்களில், 56 சதவீதம். சீனாவின் ஒட்டு மொத்த நுகர்பொருள் தேவையில், 20 சதவீதம், இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படுகிறது.
இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில், 40 சதவீதம் போலி என, சீன அரசின் அறிக்கை வெளியாகி இருப்பதால், சீனாவின் முன்னணி, 'இகாமர்ஸ்' நிறுவனமான, அலிபாபாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.