29/05/2023
வரலாற்றில் இன்று மே 29
1919 - ஐன்ஸ்ட்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டினைப் பரிசோதனைக்கு உட்படுத்திய முதல் ஆய்வான, எடிங்ட்டன் பரிசோதனை நடத்தப்பட்ட நாள்
ஆங்கிலேய வானியலாளர்களான ஆர்த்தர் எடிங்ட்டன், ப்ராங்க் டைசன் ஆகியோர், 1919 மே 29இல் ஏற்பட்ட முழுக் கதிரவ மறைப்பின்போது(சூரிய கிரகணம்), இந்தப் பரிசோதனையை மேற்கொண்டனர். ஒளியின் பாதையில், ஈர்ப்பு விசை விலகலை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் இந்த ஆய்வில் சோதித்தனர். நியூட்டனின் ஈர்ப்பு விதியையும், சிறப்புச் சார்புக் கோட்பாட்டையும் ஒருங்கிணைத்து, காலம், (விண்)வெளி ஆகியவற்றின் வடிவியல்(ஜியோமெட்ரிக்) பண்பாக, அதாவது, நான்கு பரிமாண கால-வெளியாக விளக்கும் பொதுச் சார்புக் கோட்பாடுதான் இயற்பியல் கோட்பாடுகளிலேயே அழகானது என்று புகழப்படுகிறது. நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது, சூரியனின் ஈர்ப்பு விசையால் சற்றே பாதை மாறுகிறது என்பதை 1911இல் அறிவித்துவிட்டாலும், அந்தக் கணக்கீடுகளில் குறையிருக்கலாம் என்று கருதிய ஐன்ஸ்ட்டீன், அதனை ஆய்வுக்கு உட்படுத்த விரும்பினார். எவ்வாறு ஆய்வு செய்வது என்று, ஜார்ஜ் ஹேல் என்ற அமெரிக்க சூரிய ஆய்வாளரிடம் ஐன்ஸ்ட்டீன் கேட்டபோது, முழுக் கதிரவ மறைப்பின்போது செய்யலாம் என்றார். இதற்கு முன்பே அமெரிக்கக் குழுவொன்று, 1912இல் ஏற்பட்ட முழுக்கதிரவ மறைப்பின் போது, பிரேசிலில் இத்தகைய ஆய்வை மேற்கொள்ள முயன்று தோற்றிருந்தது. 1914 ஆகஸ்ட்டில் ஏற்படும் முழுக் கதிரவ மறைப்பின்போது, க்ரீமியாவில் இந்த ஆய்வை மேற்கொள்வதென்று முடிவெடுத்து, குழுவினர் சென்றும்விட்டாலும் முதல் உலகப்போர் தொடங்கியது இடையூறாகியது. ஆனாலும், கைது செய்யப்பட்டவர்கள், கட்டாயத்தால் நாடு திரும்பியவர்கள் போக எஞ்சியவர்கள் காத்திருந்தாலும், மேகங்கள் மறைத்ததால் ஆய்வு வெற்றிபெறவில்லை. சரியான கணக்கீட்டுடன், 1915இல் பொதுச் சார்புக் கோட்பாட்டை ஐன்ஸ்ட்டீன் வெளியிட்டுவிட்ட பின்னணியில், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்ற எடிங்ட்டனுக்கு, அதன்மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், 1918இல் ஒரு முழுக் கதிரவ மறைப்பில், அமெரிக்கக் குழு மீண்டும் முயன்று, மேகமூட்டத்தால் தோற்றது. 1919 மே-யில், பிரேசிலிலும், மேற்குஆஃப்ரிக்காவின் ப்ரின்சிப்பி தீவிலுமாக இரு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட எடிங்ட்டனின் ஆய்வில், சூரியன் நிலவால் மறைக்கப்பட்டதும் ஏற்படும் இருளில் வழக்கமாகப் பகலில் தென்படாத நட்சத்திரங்களின் இடங்கள் குறிக்கப்பட்டு, இரவில் அவற்றின் வழக்கமான இடங்களுடன் ஒப்பிட்டு, ஒளியின் பாதை விலகல் கணக்கிடப்பட்டது. ஆய்வின் முடிவுகள் ஐன்ஸ்ட்டீனின் கோட்பாட்டைச் சரியென்று நிரூபித்ததுடன், அதற்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் புகழையும் உடனடியாக ஈட்டித் தந்தன.