20/09/2026
மகள் சாந்தியால் தீர்ந்த சிவாஜியின் பிரச்சனை
---------------------------------------------------------
'காலச்சக்கரம் ' நரசிம்மா .
சில சம்பவங்கள் சாதாரணமாக தோன்றும் . ஆனால் அதில் தொடர்புள்ளவர் , திடீர் என்று மறைந்து போகும் போது, அந்த சம்பவம் சுவாரஸ்யமாக மாறிவிடும் . இது ஒரு சாதாரண சம்பவம்தான் . ஆனால் ஒரு தந்தை -மகள் இடையே உள்ள வாஞ்சையை காட்டும் ஒரு சம்பவம் .
சிவாஜி கணேசனின் ஆருயிர் மகள் சாந்தி நாராயணசாமி காலமாகிவிட்டார் . "நான் பார்த்து வளர்ந்த பெண்'' -- என்று மிகவும் வருத்தப்பட்ட சித்ராலயா கோபு, ஒரு சுவாரஸ்மயமான சம்பவத்தை நினைவுகூர்ந்தார் .
உத்தர் புருஷ் என்கிற 1966 ல் வெளியான பெங்காலி படத்தை ஏவிஎம் நிறுவனம் ,வாங்கி , உயர்ந்த மனிதன் என்கிற பெயரில் தயாரித்தது . சிவாஜி கணேசனின் 125 வது படம் என்பதால் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு படத்திற்கு விசேட கவனம் செலுத்தினார் . அதே சமயம் , சிவாஜி கணேசனின் சொந்த நிறுவனம் ராம்குமார் பிலிம்ஸ் தயாரித்த கலாட்டா கல்யாணம் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருந்தது .
சித்ராலயா நிறுவனத்திற்கு வந்து சித்ராலயா கோபுவை சந்தித்த , ஜெயலலிதா அமமா சந்தியா , கலாட்டா கல்யாணம் சிவாஜியுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் , அதை தானும் , அம்முவும் வெகு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் , எப்போது படம் ரிலீஸ் ஆகும் . என்று கேட்டு கொண்டிருந்தார் . அந்த படம் ரிலீஸ் ஆனால் தொடர்ந்து சிவாஜியுடன் நடித்து . ஒரு கேரக்டர் ஆர்டிஸ் ட் ஆக ஜெயலலிதா பரிமளிக்க முடியும் என்று அவர் எதிர்பார்த்தார் . அதனால் எப்ப ரிலீஸ் ...எப்ப ரிலீஸ் என்று கேட்டுக்கொண்டே இருந்தார் , சந்தியா .
சிவாஜி வீட்டுக்கு சென்று ரிலீஸ் பற்றி பேசியப்போது சிவாஜி , கணேசன் , ''நான் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்த மனிதன் படம் ஓடுது ஆச்சாரி . . இப்போதைக்கு கலாட்டா கல்யாணம் என் சொந்த படம் என்கிறதால , எனது சொந்த தியேட்டர் சாந்தி ல தான் ரிலீஸ் செய்யணும்னு இருக்கேன் . இப்ப உயர்ந்த மனிதன் நல்லா ஓடுறதால , அது நூறு நாள் கடந்தால் தான் நாம ஒரு முடிவுக்கு வர முடியும் . ஏவிஎம் நிறுவனம் , கிட்ட பேசித்தான் சொல்ல முடியும் , என்று சித்ராலயா கோபுவிடமும், சி வி ராஜேந்திரனிடமும் சொல்லி விட்டார், சிவாஜி கணேசன் .
என்ன இருந்தாலும் , சிவாஜியே ராம்குமார் பிலிம்ஸ் என்கிற பெயரில் தயாரிக்கும் படம் . அவரே முடிவு எடுத்து கொள்ளட்டும் என்று சிவிஆர் ரும் , சித்ராலயா கோபுவும் நினைத்தார்கள் .
மார்ச் 9 1968, ஆம் தேதி உயர்ந்த மனிதன் நூறாவது நாள் கொண்டாடப்பட்டது . சரியாக பி சுசிலா பாடிய பால் போலவே . .. வான் மீதிலே . நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா . என்ற பாட்டு தேசிய விருது வாங்க , மீண்டும் , சாந்தி தியேட்டரில் உயர்ந்த மனிதனை பார்க்க கூட்டம் அலைமோதியது . பார்த்தவர்களே பார்த்து கொண்டிருந்தார்கள் .
நூறு நாள் கடந்ததும் , உயர்ந்த மனிதனை தூக்கிவிட்டு , தனது சொந்த தியேட்டர் சாந்தியில் தனது சொந்த படம் கலாட்டா கல்யாணத்தை ரிலீஸ் செய்ய நினைத்திருந்தார் சிவாஜி. அதாவது அவர் ரிலீஸ் செய்ய நினைத்த தேதி , வெள்ளிக்கிழமை, மார்ச் 15.
உயர்ந்த மனிதனோ நன்றாக ஓடி கொண்டிருந்தது . இந்த நிலையில் , கலாட்டா கல்யாணம் ரிலீஸ் செய்வதற்கு தங்கள் குடும்ப பெரியவரிடம் நாள் பார்க்க சொல்லி இருந்தார் சித்ராலயா கோபு .
நன்றாக ஓடும் உயர்ந்த மனிதனை தூக்கவும் சிவாஜிக்கு மனமில்லை . தனது சொந்த படம் கலாட்டா கல்யாணம் ரிலீஸ் ஆவதையும் , தாமதப்படுத்த விரும்பவில்லை . குழப்பத்தில் இருந்தார் சிவாஜி .
மார்ச் 15, மார்ச் 22,மார்ச் 29, ஏப்ரல் 5, மற்றும் ஏப்ரல் 12 ஆகிய ஐந்து வெள்ளிக்கிழமை தேதிகளை துண்டு சீட்டில் எழுதி , தனது மகள் சாந்தியை அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி சொல்லியிருந்தார் . சிறுமி சாந்தியும் ஒரு துண்டு சீட்டை தேர்ந்தெடுத்து கொடுத்திருந்தார் .
இந்த் நிலையில் சித்ராலயா கோபுவும் , சி வி ராஜேந்திரனும் அன்னை இல்லம் சென்றார்கள் .
" சிவாஜி அண்ணே ! உயர்ந்த மனிதன் நூறாவது நாள் மார்ச் 9, 1968. அதற்கப்புறம் , ஐந்து வெள்ளிக்கிழமைகள் இருக்கு ஆனால் எதுவுமே நாள் சரியாக இல்ல . என் குடும்ப பெரியவர் கிட்ட நாள் பார்க்க சொன்னேன் .
மார்ச் 15 வெள்ளிக்கிழமை பிரதமை
மார்ச் 22, வெள்ளிக்கிழமை, நவமி
,மார்ச் 29, வெள்ளிக்கிழமை பிரதமை
ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை அஷ்டமி
ஏப்ரல் 12, வெள்ளிக்கிழமை பௌர்ணமி, அன்னைக்கு நாள் நிறைஞ்சு இருக்கு , அன்னைக்கு ரிலீஸ் செய்யலாம் . அது வரைக்கும் , உயர்ந்த மனிதனே ஓடட்டும் . '' -- என்று அப்பா சித்ராலயா கோபு சொன்னார் .
"இதோ பார் ஆச்சாரி ! என் பெண் உனக்கு முன்னாடியே நாள் பார்த்துட்டா ,'' -- என்று சாந்தி தேர்ந்தெடுத்த துண்டு சீட்டை எடுத்து காட்ட , அதில் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 12, 1968 நிறைந்த பௌர்ணமியில் என்று இருந்தது வெள்ளிக்கிழமை ஏப்ரல் 12, 1968 கலாட்டா கல்யாணம் படம் ரிலீஸ் ஆனது . படம் அமோக வெற்றி .
அதற்குள் உயர்ந்த மனிதன் படம் , சாந்தி தியேட்டரில் 125 நாட்கள் ஓடி, 133 வது நாளையும் தொட்டிருந்ததது . சிவாஜிகணேசனின் 125 படம் உயர்ந்த மனிதன் 125 நாள் ஓடுவதுதான் நியாயம் என்று விதியே அதனால் தான் கலாட்டா கல்யாணம் ரிலீஸ் தள்ளி போட்டதோ என்னவோ ,'' -- என்றார் அப்பா சித்ராலயா கோபு .
சிவாஜி கணேசன் மகளின் மீது தனி வாஞ்சை கொண்டிருந்தார் . அவர் பெயரில் தியேட்டர் கட்டியதோடு , சாந்தி என்கிற யானையையும் ஒரு கோவிலுக்கு பரிசளித்தார் .
நிச்சயம் , அவர் இருந்திருந்தால் , சாந்தி தியேட்டரை இடிப்பதற்கு அவர் சம்மதித்து இருக்கவே மாட்டார் . எவ்வளவு வரலாறுகள் அந்த தியேட்டரில் பின்னி பிணைந்து இருந்தன என்பதை அவர் உணர்திருந்தார் . . காமராஜர் சாந்தி தியேட்டருக்கு வந்து தொடர்ந்து சிவாஜி படங்களை பார்ப்பது வழக்கம் .
சாந்தி நாராயணசாமி அவர்களின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற பிரார்த்தனைகள்