31/01/2026
நம் தமிழ்நாடு
ஒரு வருடத்துக்கு
ஒரு லட்சம் இன்ஜினியர்களை தயார் செய்கிறது.
இந்தியாவின் மொத்த இன்ஜினியர்கள் தயாரிப்பில்
17 % தமிழ்நாட்டு இன்ஜினியர்கள் மட்டுமே...
இதில்லாமல் இன் ஜினியருக்கு இணையான படிப்புகளை கணக்கிட்டால்
தமிழ்நாடு வருடத்துக்கு 2 லட்சம் பொறியியல் திறனாளிகளை தயார் செய்கிறது.
அப்படியானால் தமிழ்நாட்டின் அடையாளம் எது ?
அறிவியல் தொழில்நுட்பம் பகுத்தறிவுதான்.
இன்னமும் குடியரசு தின விழாவில் ஜல்லிகட்டு காளைகளை பிடித்து வருவதை காட்டிக் கொண்டே இருப்பதில் என்ன பெருமை இருக்கிறது தெரியவில்லை.
இன்று காலையில் பழைய பைக் ஒன்றில் ஒரு இளம் குடும்ப தலைவர் வண்டியோட்ட, பின்னால் அமர்ந்திருந்த இளம் அம்மா, தன் ஆறு வயது பெண் குழந்தையை மடியோடு இறுக்க அணைத்து ஒரு புத்தகத்தை வைத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்தேன்.
அப்பா அம்மாவின் நகரும் பைக்கின் பின்னால் அமர்ந்து படிக்கும் குழந்தைகளை பார்த்திருக்கிறேன்.
ஆனால் நகரும் பைக்கில் தன் குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே போகும் அம்மாவை இன்றுதான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் கல்வியில் இவ்வளவு ஆர்வமாக ஈடுபட்டுக் கொண்டிருக்க இன்னமும் தமிழ்நாட்டின் அடையாளமாக சல்லிக்கட்டு, பனை மரம் ஏறுதல், கரும்பை கடித்து தின்னல், வேட்டி, கோலம், பொங்கல் என்று டூமச்சாக ஸீனைப் போடுவது அவசியமில்லாத ஒன்றாகவே படுகிறது.
இந்த முறை எல்லாம் ஒவ்வொரு கல்லூரிகளும் பள்ளிகளும் அலுவலகங்களும் காட்டிய பொங்கல் செலிபிரேசன்ஸ் அளவுக்கு அதிகமான ஸீனைப் போடுவதாக இருந்தது.
அதிலும் பார்ப்பவர் எல்லாம் வேட்டிக் கட்டிக் கொண்டு திரிந்தது மேலும் கடுப்பேற்றியது.
பல ஆண்டுகாலம் படித்து முன்னேறி வேட்டியில் இருந்து பேண்ட் ஷர்ட்டுக்கு வந்தால், திரும்பவும் வேட்டி வேட்டி என்ற அந்த டூமச் அலட்டல் என்ன? கர்வம் என்ன?
வீட்டில் வாஷ்பேசின் இருக்கும் போது அதில்தானே முகம் கழுவி பிரஷ் செய்வோம்.
சொம்பில் தண்ணீர் மொண்டு வாய் கொப்பளித்து தரையில் துப்பும் போது அந்த நீர் காலெல்லாம் படும். சிறு வயதில் இப்படித்தான் நான் தினமும் பிரஷ் செய்வேன். செம எரிச்சலாய் வரும். சென்னை வந்து வாஷ் பேசின் வந்த பிறகுதான்” எவ்வளவு அருமையான அறிவியல் கண்டுபிடிப்பு இது’ என்று வாஷ்பேசினை புகழ்வேன்.
நான் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் ஏன் வாஷ்பேசினை விட்டு தரையில் வாய்கொப்பளித்து துப்ப வேண்டும் என்கிறேன். நான் ஏன் வருடத்துக்கு ஒருமுறை வேட்டி கட்ட வேண்டும் என்கிறேன் ? இந்த திடீர் வேட்டி மோஸ்தரின் பின்னால் ஏதோ ஒரு வியாபார யுத்திதான் தெரிகிறது.
அதே சமயம் மூட்டப்பட்ட காட்டன் லுங்கி சொல்கிறீர்களா? அது ஆண்களுக்கு வசதி. உள்ளாடை போடாமல் லுங்கி கட்டுவது ஆண்களில் ஆணுறுப்பு சார்ந்த இடங்கள் காற்றாட இருக்க மிகுந்த வசதி செய்து கொடுக்கும். லுங்கி ஒரு அறிவியல் ரீதியிலான வசதியான உடை. இப்போதும் அதை நான் அணிவேன்.
ஆனால் வேட்டியில் என்ன இருக்கிறது. ஜட்டி போடாமல் வேட்டி கட்டவே முடியாது. தூங்க முடியாது.
இளைஞர்கள் இந்த வேட்டி வெறியில் இருந்து மீள வேண்டும்.
பொங்கல் அன்று ரெண்டு பொங்கலை வைத்தோமா...ஒரு மஞ்சளை உருட்டி பிள்ளையார் செய்தோமோ, எல்லாவற்றையும் வைத்து சாமி கும்பிட்டோமோ, மதிய உணவுக்கு கூட்டுக்கறி வைத்தோமா...
மறுநாள் கறி எடுத்து தின்றோமா... அதோடு பொங்கல் முடிந்தது.
இஷ்டம் இருப்பவர் மட்டுமே காணும் பொங்கல் எல்லாம் காணச் செல்வார்கள். இப்படி அனைவரும் அல்ல...
ஆனால் இப்போதெல்லாம் ஒருவாரம் முன்னரே பொங்கல் கொண்டாடுகிறார்கள். ஒருவாரம் முன்னரே பொங்கல் கொண்டாடிவிட்டு பிறகு ஐந்து நாள் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போய்விடுவார்களாம்.
ஊர்ல போய் என்ன செய்வாய் ? ஊர்லையும் பொங்கல்தான் கொண்டுவேன் பாஸ்...
ஏழு கோடி மக்கள் பதினைந்து நாட்களாக பொங்கல் மூட் யில் இருந்தால் அந்த வெறி எதற்கு என்று தெரியவில்லை.
நம் ஊரில் ஐந்தாம் வகுப்பு படித்து ஆறாம் வகுப்புக்கு மொத்தம் 85 குழந்தைகள் செல்கிறதே இக்குழந்தைகளுக்கு வகுத்தல் கணக்கு தெரியுமா?
ஏழாம் வகுப்பு முடித்து இந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு போகிறார்களே ஸ்கொயர் டூட் கண்டுபிடிக்க தெரியுமா...
பத்து பேர் பாலிடெக்னிக் படிக்கிறார்களே நம்ம ஊர்ல இருந்து அவர்கள் என்ன கோர்ஸ் படிக்கிறார்கள். உருப்படியாக படிக்கிறார்களா... மெக்கானிக்கல் படிக்கிறார்கள் என்றால் “டிசைன் ஆப் மெஷின் எலிமென்ட்ஸ்” பாடமெல்லாம் ஒழுங்காக படிக்கிறார்களா....
ஐந்து பேர் இன்ஜினியரிங் காலேஜ் படிக்கிறார்களே அவர்களுக்கு பீஸ் கட்ட பணம் இருக்கிறதா... இல்லாவிட்டால் ஊருக்குள் ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு நாம் அந்த பீஸை கட்டலாமா...
நம் ஊரில் இடைநிற்றல் ஸ்டேஜில் பதினான்கு ஆண் மாணவர்களும், பத்து பெண் மாணவிகளும் இருக்கிறார்களே... அவர்களை எப்படி தொடர்ந்து படிக்க வைப்பது.
ஊர் பணத்தில் ஆறு நல்ல கம்யூட்டர்கள் வாங்கிப் போட்டு அதில் நல்ல AI ஆக இன்ஸ்டால் செய்து கொடுத்து, மாணவர்களுக்கு எப்படி AI யில் ஒரு விஷயத்தை தேட வேண்டும் என்கிற Prompting பயிற்சி அளிக்கலாமா...
நம்ம ஊர் பிள்ளைகளுக்கு 3D Printing அறிவு முக்கியம். ஒரு 3D பிரிண்டர் எவ்ளோ விலை... இருதாயிரமா... சரி இருக்கட்டும்...நாலு 3D Printer வாங்க ஊருக்குள் ரெண்டு பணக்காரனை ஸ்பான்ஸருக்கு பிடி... வாங்கி போடு...
3D Printing தெரிஞ்ச ஒரு ஆளை டிரைனிங் கொடுக்க சொல்லு... ஞாயிற்றுகிழமை ஞாயிற்றுகிழமை நாலு கிழமை வர அவருக்கு எவ்ளோ காசு... இருபதாயிரமா..அதையும் நாம் வசூல் செய்து கொடுப்போம்.
இப்படித்தானே ஒரு தமிழ்நாட்டின் சிற்றூர் நினைக்க வேண்டும்.
அதை விடுத்து பொங்கல் பொங்கல் பொங்கல்
வேட்டி கட்டு,
சல்லிக்கட்டு நடத்து மாட்டை விடு, மாடு முட்டி நாலு உயிர் போனாலும் போகட்டும் ஆனால் வீரமாக காட்டிக் கொள்வது முக்கியம்.
அப்புறம் தலைக்கு மேல பானையை தொங்கவிடு, கண்ணை கட்டு, தடியை கொடு, பானையை அடி... அவன் பானையை அடிக்க திணறி தடியோடு கீழே விழும் போது கைகொட்டி சிரி...
நண்பர்களே நாம் 2026 ஆம் ஆண்டிலும்
1026 ஆம் ஆண்டு காலத்தில் ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தில் இருந்த மக்கள் போல இருக்க வேண்டிய அவசியம் என்ன?
நாம் அறிவியல் கற்ற சமூகம் அல்லவா?
அந்த வித்தியாசத்தை நாம் காட்ட வேண்டும்தானே...
நம் மண்டையை எது ஆட்சி செய்ய வேண்டும் ?
அறிவியல்தானே ஆட்சி செய்ய வேண்டும்.
நாம் இன்னமும் சல்லிக்கட்டு பாரம்பரியம் பட்டுகுஞ்சம் என்று இருப்பது சரியா...
இதற்காகவா நாம் அறிவியல் கல்வி கற்றோம்...
அலுவலகத்தில் ஒருவர் ஒரு சாமி படத்தை ஒட்டி வைத்திருந்தார். அந்த சாமியின் ஒவ்வொரு உறுப்பின் அருகேவும் ஏதொ எழுதி இருந்தது.
நான் உற்று படித்தேன்.
”இந்த சாமியின் காது ஏன் பெரியது தெரியுமா... நாம் எதையும் லிசன் செய்ய வேண்டும். அதுதான் அவர் உணர்த்துகிறார்” என்றிருந்தது.
அந்த இளைஞரிடன் “நீங்க என்ன படிச்சிருக்கிங்க” என்றேன்.
‘சார் பி.ஈ எம்.பி.ஏ சார்” என்றார்.
ஒரு பி.ஈ எம்.பி.ஏ படித்த இளைஞர் எப்படி இருக்க வேண்டும்.
அவர் அப்படி அமர்ந்திருந்தால் அவரிடம் இருந்து
“அறிவு பொறி” பறக்க வேண்டாமா...
இது என்னது... இது என்னது... இதுக்கு ஆதாரம் என்னது..
”இந்த கருதுக்கோள் Research methodology இருக்கிற P test , T Test, Chi square test அப்படின்னு எல்லா டெஸ்ட்லையும் பாஸாகிட்டா... பாசாகவில்லையா... அப்போ நான் இதை நம்ப மாட்டேன்” என்று சொல்ல வேண்டாமா?
அன்றாட பேச்சில் ஆயிரம் அறிவியல்பூர்வமான டேர்ம்களை தியரிகளை அள்ளி வீச வேண்டாமா...
இந்த பத்தியைப் படிக்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருக்கலாம்... ஆனால் இதை இப்படி ரா வாக எழுதவதன் காரணம்
நான் சொல்ல வருவது
“அளவுக்கதிகமான பண்டிகை மோகம் என்பது
நம் அறிவியல் சிந்தனை வீரியத்தை சிதைக்கிறது, மழுங்கடிக்கிறது.
ஏதோ ஒருவகையில் நம்மை மறுபடியும் பழங்காலத்துக்குள்ளே இழுத்து செல்கிறது.
நாம் சாஸ்திர சம்பிரதாயத்தை அறிவியல் துணை கொண்டு கேள்வி எழுப்புவதை இந்த “டூமச் பண்டிகை ஆசைகள், கொண்டாட்டங்கள்” மழுங்கடிக்கின்றன.
இந்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அடையாளம் சல்லிக்கட்டு அல்ல
அது
பெண் கல்வி,
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி
ஏழைகள் அறிவியல் படிக்கும் வாய்ப்பு
இவைதான் தமிழ்நாட்டின் அடையாளம் என்கிற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும்.