20/10/2024
கடலூரில் 2வது ஆண்டாக கட்டற்ற மென்பொருள் தின நாள் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுக்க உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடும் ஒரு நாள் தான் Software Freedom Day என்று அழைக்கப்படுகிறது. CuddaloreGLUG எனப்படும் கடலூர் குனு/லினக்ஸ் பயனர் குழு செயலாற்றத் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடலூர் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
தனியுரிமை (Proprietary) மென்பொருட்களுக்கு, சேவைகளுக்கு தயாராக இருக்கும் மாற்று மென்பொருட்களை, சேவைகளை மக்கள் முன் காட்சிப் படுத்துவதும், அதனை நிறுவி பயன்படுத்த உதவுததும், அதனை மேம்படுத்தி பங்களிக்க விரும்பமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதும், உள்ளூர் தேவைகளுக்கு கட்டற்ற மென்பொருட்கள் மூலம் நிறைவு காண்பதும் தான் இந்த கட்டற்ற மென்பொருள் தினத்தை கொண்டாடும் நோக்கமாகும்.
அவ்வகையில் கடந்த செப்டம்பர் 22, 2024 கடலூரில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருள் கண்காட்சியில் Ubuntu, Fedora, LinuxMint, Debian போன்ற குனு/லினக்ஸ் இயங்குதளங்கள், விக்கிப்பீடியா, OpenStreetMap, செயற்கை நுண்ணறிவு, self-hosting, Stellarium போன்ற வானியல் சார்ந்த மென்பொருட்கள், கட்டற்ற விளையாட்டு மென்பொருட்கள், ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் Privacy சார்ந்த மென்பொருட்கள், F-Droid மூலம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்தக் கூடிய கட்டற்ற செயலிகள், மருத்துவம் மற்றும் உடல் நலம் சார்ந்த மென்பொருட்களை கடலூர் குனு/லினக்ஸ் பயனர் குழுவினர் காட்சிப் படுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த கடலூர் குனு/லினக்ஸ் பயனர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு நம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் சமூகம் டிஜிட்டல் தந்நிறைவு பெற்று முன்னேற கட்டற்ற மென்பொருளும், தடையற்ற அறிவும் அவசியமானது. தொடர்ந்து முன்னேறுவோம்.